பொதுவாக ரெட்டி அரசர்களின் ஆரம்பகால வரலாற்றை பின் வருமாறு பிரித்துக் காணலாம்.
1.காகதீய மன்னர்களின் ஆட்சியில் ரெட்டிகள்.
2.பாமினி சுல்தான்கள் காலத்தில் ரெட்டிகள்.
3.விஜய நகரப் பேரரசின் காலத்தில் ரெட்டிகள.
காகதீய பேரரசின் ஆட்சிக் காலத்தில் ரெட்டிகள்
முதலாம் பிரதாப ருத்ரதேவன் : கி.பி. 1158 முதல் 37 வருடங்கள் ஆட்சி புரிந்தான். தற்போதைய ஆந்திரதேசம் என்ற ஒன்று உருவாவதற்கு இவனே காரணம் எனலாம். தன்னைச் சுற்றியுள்ள சிற்றரசர்களையெல்லாம் வெற்றி கண்டு தன் நிலப்பகுதி முழுவதையும் ஒரு தெலுங்கு நாடாக மாற்றினான். இவரிடத்தில் செரகு இன ரெட்டி சிற்றரசர்கள் தளபதிகளாகப் பணி புரிந்தனர். இவர்கள் படையெடுத்துச் சென்ற போதெல்லாம் மன்னர்களுக்கு வெற்றியே கிடைத்தது. ருத்ரதேவன் மறைவுக்குப் பின்னர் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் கலகங்களை ராச்சேர்ல ருத்ரா ரெட்டி என்ற ரெட்டி தளபதி கலகங்களை அடக்கி நாட்டைக் கவனித்து வந்தான். முதலாம்பிரதாப ருத்ர தேவனின் தளபதிகளாக பணிபுரிந்த ரெட்டிகள் சோழர்களுக்கும் விசுவாசமாக இருந்தார்கள்.
கணபதி தேவன் : (கி.பி.1199 - 1262) இவர் பொறுப்பேற்றவுடன் இப்போதைய ஆந்திரபிரதேசம் என்று சொல்லக்கூடிய நிலப்பகுதி முழுவதையும் தனது ஆளுமைக்குட்படுத்தினான். இவன் தெற்கே படை நடத்தி சோழர்களையும், சாளுக்கியர்களையும் வென்று காஞ்சியைக் கைப்பற்றினான். கருடக் கொடியுடன் கணபதி தேவனின் தளபதி ராச்சேர்ல ருத்ரா ரெட்டி என்பவன் காஞ்சியுள் நுழைந்தான் என ஏகாம்பரநாதர் கோவில் கல்வெட்டு கூறுகிறது. பாலம்பேடு கல்வெட்டின் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது. இவரது படைகள் இராஷ்டிரகூடர்களின் கீழ் இருந்ததால் இவர்களும் கருடக் கொடி சின்னத்தைப் பயன் படுத்தியதாகவும் தெரியவருகிறது. இவரது காலத்தில்தான் மகாபாரதம் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டது. இவருக்குப் பின் இவரின் மூத்த மகள் ருத்ரம்மா பொறுப்பேற்றார்.
ருத்ரம்மாதேவி (கி.பி.1259 -1291) வரை ஆட்சியில் இருந்தார். நாட்டை ஆள்வது பெண் என்பதால் இவரை அரசியாக ஏற்க மறுத்து பலர் கலகத்தில் ஈடுபட்டனர். கயஸ்தா தலைவர்கள், ராச்சேர்லா ரெட்டி குடும்பத்தினர், மற்றும் ரெட்டி தளபதிகள் இவருக்கு விசுவாசமாக இருந்து எதிரிகளை அடக்கினர். இவர் காலத்தில் நாயக்க தளபதிகளுக்குச் சமமானவர்களாக ரெட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். குறிப்பாக மாதைய ரெட்டி,கொங்க ரெட்டி ஆகியோர் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
பிரதாப ருத்ரன் : ருத்ரம்மாதேவிக்குப் பின் பிரதாப ருத்ரனின் ஆட்சி நடைபெற்றது. இவரது ஆட்சியில் கொங்க ரெட்டி என்பவரும்,கிருஷ்ண நாயக்கர் என்பவரும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தனர். இவர் காலத்தில் படைகள் இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டன. இவரது எல்லைகளாக கிழக்கே வங்காள விரிகுடா கடல், மேற்கே ஸ்ரீசைல மலைகள், தெற்கே காளஹஸ்தி மலைப் பகுதி, வடக்கே கஞ்சம் மாவட்டத்தில் மகேந்திர மலைகளுக்குட்பட்ட பகுதிகள் இருந்தன. பிரதாபருத்திரன் தனது ஆட்சியின் ஆரம்ப முதல் இறுதி வரை ரெட்டிகளுக்கு கடும் எதிரியாகவே செயல்பட்டான். இவன் தன் நாட்டில் தஞ்சம் புகுந்திருந்த ரெட்டிகளுக்கு 9-இல் ஒரு பங்கு வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான். இதனை முதலில் பெல்த்தி ரெட்டி என்ற சிற்றரசன் ஏற்றுக் கொண்டான். பின்னர் வந்தவர்கள் ஏற்கவில்லை.
2. பாமினி சுல்தான்களின் ஆட்சியில்ரெட்டிகள்
அலாவுதீன் கில்ஜி : தக்காணத்தின் மீது தன் கவனத்தைத் திருப்பிய டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி 1310 ஜனவரி-19-இல் தன் தளபதி மாலிக்கபூரை அனுப்பி பிரதாப ருத்ரனை முற்றுகையிட்டுத் தாக்கினான். 25 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாத இவன் ஓரு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு சுல்தான்களின் ஆட்சிக்கு வழிவிட்டான். இதனால் வேளாண் குடிமக்கள் முஸ்லீம் படையெடுப்புகளினால் பெருமளவு பாதிப்புக்குள்ளாயினர். ரெட்டி இன மக்கள் தங்கள் உழைப்பின் பயனை அனுபவிக்க முடியவில்லை. இந்தக் குழப்பமான காலகட்டத்தில் சொத்துக்களுக்கும், உடைமைகளுக்கும் உத்திரவாதமில்லை. கோயில்கள் இடிக்கப்பட்டன. சிலைகள் நொறுக்கப்பட்டன. தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ‘ரே” தனது குறிப்பில் இராஜமகேந்திரம் கோவில் இடிக்கப்பட்டு மசூதியாக மாற்றப்பட்ட விவரத்தைக் குறிப்பிடுகிறார். இந்துக்கள் மொத்தமாகக் கொல்லப்பட்டனர். பலர் மதம் மாற்றப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. முஸ்லீம் தலைவர்களுக்கு அடிமைகளாக ஆண்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். சுல்தான் ரெட்டிகளின் கொண்டவீடு பகுதிகளைக் கைப்பற்றினான். ரெட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு நிலைமையை சமாளிக்கத் திட்டமிட்டனர். இதனைத் தடுக்கும் முயற்சியில் கோம்கயரெட்டி என்ற சிற்றரசர் ஈடுபட்டார். இவர் பிரதாப ருத்திரன் முஸ்லீம்களுக்கு வழி விட்டதைப் பெரிதும் கண்டித்தார். ஆனால் முஸ்லீம் அரசர்களின் ஆட்சி இப்பகுதியில் வலுவானதாக அமைந்தது. இம் மன்னர்களுக்கு வரி செலுத்த மறுத்து, பிரதாபருத்ரனுக்கு எதிராகப் போரிட்டு கண்டிக் கோட்டையைக் கைப்பற்றினான். அதுமுதல் கண்டிக்கோட்டை முக்கிய தலைநகர் ஆனது. அந்தன்கிவேமரெட்டி என்ற ரெட்டி சிற்றரசன் நாட்டை முஸ்லீம்களிடமிருந்து மீட்டு இந்து தர்மத்தை நிலைநாட்ட போராடினான். இத் தருணத்தில் தக்காணத்தின் அகமத் நகர், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார், பீரார், பகுதிகளில் சுதந்திர அரசுகள் செயல்பட்டன.
ஆனால் தக்காணத்தில் இருந்த இந்து சிற்றரசர்களிடையே ஒற்றுமை இல்லாததால் பொது எதிரியான பாமினி சுல்தான்களிடம் ரெட்டி சிற்றரசர்களும் தோல்வியுற்றனர். ஆனால் கி.பி.1323-இல் போஜராஜ ரெட்டியும், கண்ணம நாயக்கரும் பிரதாப ருத்ரனைக் காட்டிக் கொடுத்ததாகவும், இதற்கு அப்பகுதிகளை ஆளக்கூடிய உரிமை தருவதாக டெல்லி சுல்தான்களால்
நம்பிக்கையூட்டப் பட்டதாகவும் பேராசிரியர் N.பு. ரங்கா தமது முயமயவாலைய யேலயம’ள என்ற நூலில் பக்.45-இல் குறிப்பிடுகிறார்.
3. விஜய நகரப் பேரரசின் ஆட்சில் ரெட்டிகள்
கி.பி. 15, 16-ஆவது நூற்றாண்டுகளில் தென்னிந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசு உயர்ந்த நிலையைப் பெற்றிருந்தது. இதை சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீட்டு வம்சம் போன்ற வம்சங்கள் இப்பேரரசை ஆண்டு வந்தன.
இதில் சங்கம வம்சத்து மன்னர்களான முதலாம் ஹரிஹரன், முதலாம் புக்கன், இரண்டாம் ஹரிஹரன்,மற்றும் துளுவ வம்சத்தைச் சார்ந்த கிருஷ்ணதேவராயர் போன்ற மன்னர்கள் புகழ் மிக்கவர்களாவர்.
இவர்கள் காலத்தில் கடப்பை, நெல்லூர், கோலார் அடங்கிய பகுதிகள் யாவும் கிழக்கில் ஒரிஸா முதல் மேற்கில் பட்கல் வரையிலும் வடக்கில் ரெய்ச்சூர் முதல் தெற்குக் கரையோரம் வரையிலும் மற்றும் இலங்கை வரையிலும் விஜயநகரப் பேரரசின் செல்வாக்கு பரவியிருந்தது.
முஸ்லீம் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத ரெட்டிகளில் பலர், விஜயநகர தேசத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். விஜயநகர பேரரசின் தோற்றத்திற்குக் காரணமான ஹரிஹரர், புக்கர் என்ற சகோதரர்கள் எல்லைகளை விரிவு படுத்தினர். இவர்கள் மேற்கில் அரபிக்கடல், கிழக்கில் காஞ்சிபுரம், வடக்கில் கிருஷ்ணா நதிக்கு அப்பாலும், தெற்கில் காவேரியையும் எல்லைகளாகக் கொண்டிருந்தனர்.
முதலாம் புக்கராயர்: முதலாம் புக்கராயர் கொண்டவீட்டினைத் தாக்கி ரெட்டி அரசில் தலையிட்டார். அதன் அரசர் அனபோதா ரெட்டி தோற்கடிக்கப்பட்டார். அஹோபிலம், விலுகுண்டா பகுதிகள் புக்கராயரால் கைப்பற்றப்பட்டன.
முதலாம் தேவராயர்: முதலாம் தேவராயர் ராஜகொண்டாவின் வேலமாக்களுடனும், கொண்டவீடு ரெட்டிகளுடனும் தொடர்ந்து போரிட்டார். இதேபோல் 1419-இல் பாமினி சுல்தான்களையும் தோற்கடித்தார். பாமினி சுல்தான்களின் கீழிருந்த கொண்டவீடு ரெட்டிகளிடமிருந்து உதயகிரி, மோட்டுப்பள்ளி அகிய பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார்.
இரண்டாம் தேவராயர்: இரண்டாம் தேவராயர் தமது அமைச்சரின் தலைமையில் வலிமையான படையை அனுப்பினார். இதன் மூலம் கோதாவரிப் பகுதியில் ரெட்டிகளின் ஆட்சியை மறுபடியும் நிலை நாட்ட உதவினார். இதனால் இரண்டாம் தேவராயருக்கு பல ரெட்டி சிற்றரசர்கள் கப்பம் செலுத்தினர். ஒரிஸாவின் கஜபதி அரசர் கி.பி. 1463-இல் கொண்டவீடு, உதயகிரி இராஜமகேந்திரம் பகுதிகளைக் கைப்பற்றினார். இவர் காஞ்சி நகர் வரை ஊடுருவினார்.
ரெட்டிகளில் பலர் படைத் தலைவர்களாகவும், வரி வசூலிப்பவர்களாகவும், இராஜப் பிரதிநிதிகளாகவும் இருந்தனர். ரங்கா ரெட்டி, மோப்பி ரெட்டி, லிங்கா ரெட்டி போன்றோர் தமிழகத்தில் முகாமிட்ட செய்திகள் மன்றாடியார்களின் வரலாறுகளில் காணப்பெறுகிறது. இதனாலேயே காங்கேயம் பகுதிகளில் இன்றும் ரெட்டிப்பாளையம், லிங்காரெட்டிபாளையம், ரங்காரெட்டிபாளையம் என்று அழைக்கப்படுவதே இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.